
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ம் தேதி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மருத்துவமனையை சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்து சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த கொலை வழக்கை மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி சரியாக கையாளவில்லை என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிகாம் மாணவரான கீர்த்தி சர்மா என்பவர் இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மம்தா பானர்ஜியை இந்திரா காந்தி போல சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்றும், உங்களால் அதை செய்ய முடியாவிட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த மருத்துவரின் புகைப்படத்தையும் அந்தப் பதிவில் ஷேர் செய்திருந்தார். இவ்வாறு அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டது சட்டப்படி குற்றமாகும். எனவே மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த அந்த பிகாம் மாணவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.