பல மாநில அரசுகளும் தங்களுடைய சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில் குஜராத் அரசானது வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. குஜராத் மாநிலம் துவாரகா கடற்கரையில் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறது. இந்து மதத்தின் புராண முக்கியத்துவம் வாய்ந்த துவாரகா நகரின் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய தீவான பெட் துவாரகாவை சுற்றியுள்ள கடல் வாழ் உயிரினங்களை ஆராயும் திட்டத்தில் மஸ்கான் டாக் லிமிடெட் நிறுவனத்தோடு குஜராத் அரசு இணைந்துள்ளது.

இந்த திட்டமானது இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றி இருக்கும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் 100 மீட்டர் டைவ் செய்யவும் இந்த நீர்மூழ்கி சுற்றுலா வசதி வாய்ப்பு அளிக்கும். மேலும் துவாரகா கடற்பகுதியில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை காட்ட உள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் சுமார் 35 டன் எடை கொண்டதாக உள்ளது. முப்பது பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.