அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் சதுக்க வளாகத்திற்கு வெளியே திடீரென பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. அங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தடைசெய்யப்பட்ட ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (SFJ) அமைப்பைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போர்க்கொடி தூக்கினர்.
போராட்டத்தின் போது இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியைக் கிழித்தெறிந்தும், கால்களால் மிதித்தும் அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு கொதித்தெழுந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் ஆதரவாளர்கள், சம்பவ இடத்திலேயே காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியது.
இந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காலிஸ்தான் அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னூன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைமையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியாவில் ‘இந்து தேசத்தை’ அமைக்கும் தீவிர முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய அவர், 1984-ல் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை, 1992 பாப்ரி மசூதி இடிப்பு மற்றும் மணிப்பூரில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தியாவின் அரசு இயந்திரம் முழுவதும் சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் பன்னூன் நியூயார்க் மண்ணில் நின்று ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார். காலிஸ்தான் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, மனித உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை பேணும் 60-க்கும் மேற்பட்ட பல்வேறு அமெரிக்க வாழ் இந்திய அமைப்புகளும் இந்த நிகழ்விற்கு எதிராகத் திரண்டதால் மேடிசன் சதுக்கப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
🚨 #BREAKING: NEW YORK CITY
Pro-Khalistan Sikh Protesters Stopped RSS chief Mohan Bhagwat outside Madison Square Garden in New York and Teared apart Tiranga (Indian National Flag).
SFJ General Counsel Gurpatwant Singh Pannun accused the RSS-BJP leadership of pursuing the… pic.twitter.com/CGASKMUmX6
— Red Cell Intel (@Red_Cell_Intel) August 29, 2026
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்களுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் நிலையில், நியூயார்க் நகர சபை மற்றும் மேடிசன் சதுக்கத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அன்னிய மண்ணில் இந்திய தேசியக் கொடி கிழித்து அவமதிக்கப்பட்ட இந்த கொடூரச் சம்பவம், உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
