இந்திய நீண்ட  தூர ஓட்ட வீராங்கனை அர்ச்சனா ஜாதவ், டோப்பிங் சோதனையில் தோல்வியடைந்ததற்காக நான்கு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் புனே அரை மராத்தான் போட்டியில் இருந்து எடுத்த பரிசோதனை மாதிரியில் Oxandrolone என்ற தடை செய்யப்பட்ட அனபோலிக் ஸ்டீராய்டு கண்டறியப்பட்டது. இது உடலில் புரத உற்பத்தியை ஊக்குவித்து, தசை வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. உலக தடகள ஆணையத்தின் (Athletics Integrity Unit – AIU) கூற்றுப்படி, ஜாதவ் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்க்காததாலும், அவற்றை ஏற்கும் வகையில் அவர் பதிலளித்ததாலும், அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் அதற்கு முன்பே அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதாகவும் AIU அறிவித்துள்ளது.

AIU, இந்திய தடகள சம்மேளனம் (Athletics Federation of India – AFI) மூலம் ஜாதவுக்கு மார்ச் 3ஆம் தேதி வரை பதில் அளிக்க கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அவர் எந்தவொரு முறையீடும் செய்யவில்லை. மேலும், அவர் ‘B’ மாதிரி சோதனைக்கு செல்லுவதாக ஆரம்பத்தில் கூறினாலும், அதற்கான செலவினங்களை செலுத்த தவறியதால் அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது. அர்ச்சனா ஜாதவ், கடந்த அக்டோபரில் டெல்லி அரை மராத்தான் போட்டியில் இந்திய பெண்கள் பிரிவில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். இந்த தடையின் காரணமாக, 2024 டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு அவர் பெற்ற அனைத்து பதக்கங்கள், பரிசுத் தொகைகள், மற்றும் புள்ளிகள் எல்லாம் ரத்து செய்யப்படும். இது அவரது தடகள வாழ்க்கைக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.