பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக இவை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, பன்னாட்டு கடன் மதிப்பீட்டு நிறுவனம் மூடிஸ் (Moody’s) தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது. இதில், இரு நாடுகளுக்கிடையே எழும் மோதல்கள் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், ஆனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடிஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார உறவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே நிலவும் பதட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு தடையில்லாமல் இருக்கக்கூடும். இருப்பினும் பாதுகாப்பு தொடர்பான செலவுகள் அதிகரிப்பது, நாட்டின் நிதி ஒழுங்குமுறையை மெதுவாக்கும்”. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு மீது அழுத்தம் ஏற்படலாம் என்றும், இது எதிர்கால வளர்ச்சியில் சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாறாக, பாகிஸ்தானுக்கு இதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என்றும் மூடிஸ் கணித்துள்ளது. “பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார மேம்பாடு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி உதவியால் சற்று மேம்பட்டுள்ளதாலும், அந்நிய செலாவணி இருப்பு உயர்ந்துள்ளதாலும் தெரிகிறது. ஆனால் தொடர்ச்சியான பதட்டங்கள் பாகிஸ்தானின் நிதி ஒருங்கிணைப்பையும், கடன் திருப்பிச் செலுத்தும் திறனையும் பெரிதும் பாதிக்கக்கூடும்” என மூடிஸ் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு மூடிஸ் ‘Caa2’ எனும் குறைந்த மதிப்பீட்டினையும், இந்தியாவுக்கு ‘Baa3’ எனும் தொடர்பு நிலை மதிப்பீட்டையும் வழங்கியுள்ளது. இது இந்தியா தற்போதைக்கு பொருளாதார ரீதியாக சீரான நிலையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் பாதுகாப்பு சூழ்நிலை மேம்பட இந்தியா நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.