பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்தார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறிய நிலையில், டிரம்ப் உலகின் மிகச்சிறந்த தலைவர் மோடி என்றும் என்னுடைய மிகச்சிறந்த நண்பர் என்றும் புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இந்தியாவுடன் மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய இருக்கிறோம் என்றும் கூறினார். இந்திய நேரப்படி இன்று பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் சந்தித்த நிலையில் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேசியதாவது, நான் வெள்ளை மாளிகையில் மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன். எனக்கு இந்திய மக்கள் மூன்றாவது முறையாக பிரதமராக வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில், நம்முடைய இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி ஒன்றாக பயணிப்போம்.

நான் ஏற்கனவே இந்த யுகம் போருக்கானது அல்ல என்று புதினுடன் பேசியுள்ளேன். எனவே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா போரில் நடுநிலையாக இல்லை. இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கம் மட்டும்தான் நிற்கும். உலகின் பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா இருக்கும் நிலையில் இந்தியாவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ளது. இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா ஒன்று சேர்ந்து வரும்போது மிகப்பெரிய பலம் பெறும். நாங்கள் மனித குலத்தின் நலனுக்காக பணியாற்றுவோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துக் கொள்ள தயார் என்றும் பிரதமர் மோடி கூறினார்.