உலகின் சிறந்த இரவுப்பொழுது நகரங்கள் குறித்த 2026-ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், இந்தியாவின் பெங்களூரு 17-வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே நகரமாக பெங்களூரு உள்ளது.

உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மற்றும் சர்வதேச வல்லுநர்களின் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. இரவு நேர பொழுதுபோக்கு இடங்களின் தரம், பாதுகாப்பு, செலவு, சமூக கலாசாரம் மற்றும் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த மக்களுக்கான வரவேற்பு உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூருவில் இரவு நேரத்தில் செயல்படும் பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் இந்த அங்கீகாரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நேரலை இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், கலை சார்ந்த மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பல்வேறு இரவு நேர நிகழ்வுகள் நகரத்தின் இரவுப்பொழுது கலாசாரத்தை தனித்துவமாக்குவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தப் பட்டியலில் பாங்காக் முதலிடத்திலும், பெர்லின் 2-வது இடத்திலும், நியூயார்க் 3-வது இடத்திலும் உள்ளன. மெல்போர்ன் 4-வது இடத்தையும், சாவ் பாலோ 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. அதேவேளையில், இந்தியாவின் பிரபல இரவுப்பொழுது நகரங்களாக கருதப்படும் மும்பை மற்றும் டெல்லி இந்த 20 நகரங்கள் கொண்ட பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.