இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாக இருந்தாலும், சில பகுதிகளில் நிலவும் பழக்கவழக்கங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்துகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ‘சிவ்புரி’ (Shivpuri) கிராமத்தில், திருமணத்திற்காகப் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும் ‘ததிச்சா’ (Dhadicha) என்ற வினோத நடைமுறை இன்றும் தொடர்கிறது. 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான ஸ்டாம்ப் பேப்பர்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. வசதி படைத்த ஆண்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பெண்ணை மனைவியாக வைத்திருக்க இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒப்பந்த காலம் முடிந்ததும் அந்தப் பெண் மீண்டும் மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இந்தப் பழக்கம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை இக்கிராமத்தை நோக்கி ஈர்க்கிறது.
மறுபுறம், லடாக்கில் உள்ள ‘ஆர்யப் பள்ளத்தாக்கு’ (Arya Valley) சர்வதேச அளவில் ஒரு விசித்திரமான காரணத்திற்காகப் புகழ்பெற்றது. இங்குள்ள ‘புரோக்பா’ (Brokpa) பழங்குடியின மக்கள், மாவீரன் அலெக்சாண்டரின் படை வீரர்களின் நேரடி வாரிசுகள் என்றும், அவர்கள் ‘தூய ஆர்ய வம்சத்தைச்’ சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இதனால், தங்களுக்குத் தூய ஆர்ய ரத்தத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில், ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பெண்கள் இந்தக் கிராமத்திற்கு வருகை தருகின்றனர். இங்குள்ள ஆண்களுடன் உடலுறவு கொண்டு கர்ப்பம் தரிப்பதற்காக அவர்கள் பெரும் தொகையைப் பணமாக வழங்குகின்றனர். “சுத்தமான வம்சம்” என்ற பெயரில் நடக்கும் இந்த ‘பிரக்னன்சி டூரிசம்’ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
