ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவரது அபாரமான ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகமாக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 128 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் வைபவ் குறித்து பேசிய காம்ரான் அக்மல், “வெறும் 8 ஐபிஎல் போட்டிகளிலேயே அவர் இத்தனை சாதனைகளைச் செய்துள்ளது வியப்பளிக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அவர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படுவார் என நான் நம்புகிறேன். மிகச்சிறிய வயதிலேயே ஆட்டத்தின் போக்கை உணர்ந்து விளையாடும் விதம் அவரிடம் அபாரமாக உள்ளது. 128 ரன்கள் என்ற சிறிய இலக்கை விரட்டும்போது கூட, பதற்றமின்றி 15 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சாதாரணமானதல்ல.
வைபவின் இந்த வளர்ச்சிக்கு அவரது தந்தை மற்றும் பயிற்சியாளர்களின் கடின உழைப்பே காரணம் என்று அக்மல் புகழாரம் சூட்டினார். மேலும், “இப்போது இவருக்கு 15 வயதுதான் ஆகிறது. இவருக்கு 25 வயது ஆகும்போது, இவரை எப்படி அவுட் செய்வது அல்லது எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பந்துவீச்சாளர்கள் பயப்படுவார்கள்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குவஹாத்தியில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ், தனது அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, தனது முதல் போட்டியில் பஞ்சாபிடம் தோற்றிருப்பதால், இந்த ஆட்டத்தில் மீண்டு வர கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
