நியூசிலாந்து மண்ணில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட் விற்பனை வரலாறு காணாத வகையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடக்கக் கட்ட முன்பதிவு தொடங்கிய வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாகவே சாதனை அளவாக 26,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்திய அணியின் இந்த பிரம்மாண்டமான வருகை நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த சுற்றுப்பயணம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இந்த தொடரின் டி20 போட்டிகள் நடைபெறும் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த மைதானத்தில் உலகத்தரம் வாய்ந்த இந்திய நட்சத்திர வீரர்களைக் காண ரசிகர்கள் முந்திக்கொண்டுள்ளனர்.

இதேபோல், அக்டோபர் 22 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கும், நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. 9,000 ரசிகர்கள் அமரும் வசதிகொண்ட  மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும்  மிக விரைவில் முழுமையாக விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியம்  மூன்றாவது டி20 மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க பேசின் ரிசர்வ் மைதானம் முதல் டெஸ்ட் போட்டிக்கும் தயாராகி வருகின்றன. இந்த மகத்தான வரவேற்பு குறித்துப் பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அதிகாரி கிளென் கிரிட்லி ரசிகர்களின் ஆர்வம் வியப்பளிப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் டிக்கெட் விலையை உயர்த்தாமல் வைத்திருப்பதாகவும், ‘கிரிக்கெட் நேஷன்’ மூலம் 30 டாலருக்கும் குறைவான விலையிலேயே டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த போட்டிகளைத் தொடர்ச்சியாகக் காண ‘The Four’, ‘The Six’ போன்ற சிறப்புத் தள்ளுபடி தொகுப்புகளையும்  வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொது மக்களுக்கான நேரடி விற்பனை செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இருப்பினும், ‘Cricket Nation’-ல் இலவசமாகப் பதிவு செய்வதன் மூலம் ரசிகர்கள் தற்போதும் பிரத்யேக முன்பதிவு மற்றும் 15% தள்ளுபடி சலுகையைப் பெற முடியும். உலகக் கிரிக்கெட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மோதும் இந்தப் போட்டிகளைக் காண ரசிகர்கள் உடனடியாகத் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.