இந்திய விமான நிலையங்களில் பயணிகள் தங்களது உடமைகளைப் பெற்றுக் கொள்ளும் ‘லக்கேஜ் பெல்ட்’  பகுதியில் நிலவும் தேவையற்ற அவசரமும், பொது ஒழுக்கமின்மையும் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மங்களம் பொடார் என்ற இந்தியப் பயணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், லக்கேஜ் பெல்ட் நகரத் தொடங்கியதுமே பயணிகள் அனைவரும் அதன் தொடக்கப் பகுதியிலேயே கூட்டமாக முண்டியடிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mangalam Poddar (@a_living_mango)

இதனால் மற்ற பயணிகள் தங்களது உடமைகளை எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு தேவையற்ற நெரிசலை உருவாக்குவதாகவும் அவர் சாடியுள்ளார். பெல்ட்டின் மறுபகுதி முற்றிலும் காலியாக இருக்கும் நிலையில், லக்கேஜ் எப்படி சுற்றினாலும் அங்குதான் வரப்போகிறது என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் பயணிகள் செயல்படுவது விசித்திரமாக இருப்பதாக அவர் தனது பதிவில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்தியப் பயணிகளின் இந்த அவசரப் புத்தியை ஒப்புக்கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்திய சமூகத்தில் நிலவும் ஒருவித ‘நம்பிக்கையின்மை’ காரணமாகவே, நமது லக்கேஜை யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் விமானம் தரையிறங்கிய உடனே எழுந்து நிற்பதும், பெல்ட் அருகே முண்டியடிப்பதும் நடப்பதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போக்குவரத்து சிக்னல்களில் கோட்டிற்கு முன்னால் வாகனங்களை நிறுத்தி முந்திச் செல்ல முயலும் அதே போட்டி மனப்பான்மைதான் இங்கும் பிரதிபலிக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க, விமான நிலைய ஊழியர்கள் சரியான அறிவிப்புகளைச் செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.