திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்திப் பெயர் சூட்டப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “சில அதிகாரிகள் செய்த தவறால் மத்திய அரசு மீது இந்தித் திணிப்புப் பழி விழுகிறது. முறையாகத் தமிழ் மொழிபெயர்ப்பை வைக்க ரயில்வே அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்பது போல அவர் குறிப்பிட்டிருந்தார்.

​தமிழிசையின் இந்தப் பதிவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். “இந்தித் திணிப்பை அதிகாரிகள் மீது தூக்கிப் போடாதீர்கள்; இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்குப் பதற்றம் கூடுகிறது” என்று சாடினார். மேலும், வந்தே பாரத், தேஜஸ், நமோ பாரத், அம்ரித் பாரத் என மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவது பாஜக அரசின் திட்டமிட்ட செயல் என்பதைப் பட்டியலிட்டு, தமிழிசையின் வாதத்தைத் தவிடுபொடியாக்கினார்.