பெண் பயணிகளிடம் நாகரீகமான முறையில் நடந்து கொள்ளாததோடு மட்டுமல்லாமல், கம்பால் தாக்க முயற்சி செய்ததாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, நொய்டா பொட்டானிக்கல் கார்டன் மெட்ரோ நிலையத்திலிருந்து செக்டார் 128-ல் உள்ள அலுவலகத்திற்குச் செல்ல உபர் டாக்ஸி ஒன்றை முன்பதிவு செய்திருந்த ஐந்து பெண்கள், பயணத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஓட்டுநரின் தகாத நடத்தை மற்றும் வன்முறை முயற்சிகளைச் சந்திக்க நேரிட்டது.
இந்த தகவலை இளம் பெண் பயணி தாஷு குப்தா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவு செய்த டாக்ஸி (UP 16 QT 4732) டிரைவர் பிரிஜேஷ், போக்குவரத்து நெரிசல் காரணமாக ‘அண்டர்பாஸ்’ வழியாக செல்லும்படி பயணிகள் கேட்ட போதும், கேட்டதை நிராகரித்து ‘யூ-டர்ன்’ வழியே சென்று, கேள்வி எழுப்பிய பயணிகளிடம் ஆத்திரத்துடன் நடந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. அவர் அமைதியாக உட்காருங்கள், வரைபடத்தில் காட்டிய வழியே தான் போவேன்என ஹிந்தியில் கூறியதாகக் குப்தா தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், பெண்கள் நாகரிகமாக நடக்குமாறு கேட்டபோது, உன்னைப் போல பத்து பேர் எனக்காக வேலை செய்கிறேன், நான் 12–13 கார்களை ஓட்டுகிறேன் என அவதூறாக பேசியதாகவும் புகார் உள்ளது. அதைத் தொடர்ந்து, குப்தா வாகனத்திலிருந்து வெளியேற முயன்றபோது, டிரைவர் தன்னைத் தள்ளிவிட்டு, பணம் கேட்டதாகவும், பின்னர் காரின் டிக்கியிலிருந்து வெள்ளை கம்பியை எடுத்து மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
அவர் நில்லு… உன்னை இப்போதே சமாளிக்கிறேன். அதற்காக சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் போகிறேன்) என டிரைவர் மிரட்டியதாக பதிவிட்டுள்ள நிலையில், அவரின் செயல்கள் பயணிகள் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், நொய்டா காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் பிரிஜேஷ் அடையாளம் காணப்பட்டு அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார் என ஏ.சி.பி பிரவீன் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். “தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்திற்குப் பதிலளித்த உபர் இந்தியா, தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இதுபோன்ற நடத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பயணிகளின் பாதுகாப்புதான் எங்களுக்குப் பிரதானம். தயவுசெய்து உங்கள் பயண விவரங்களை எங்களுடன் நேரடிச் செய்தி மூலம் பகிரவும். மேலும் எங்கள் பாதுகாப்புக் குழு விரைவில் உங்களைத் தொடர்பு கொள்கிறது,”
என்று தெரிவித்தது.
