தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்விக்கூடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் அண்ணாமலை சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
நடிகர் கமல்ஹாசன் ஒரு சிறந்த கலைஞர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய நிதியமைச்சர் பேசியதை அவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். கமல்ஹாசன் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது நான் தற்போது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர் தனது தவறைத் திருத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்.
நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை மக்கள் முன் வைக்கட்டும். நாங்கள் எங்கள் ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளை முன்வைக்கிறோம்; மக்கள் இறுதி முடிவை எடுக்கட்டும். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்படவில்லை. அவர் எங்களுடன் தான் இருக்கிறார். தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் உள்ளதால், அவரைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கல்விக்கூடங்களில் கஞ்சா தாராளமாகக் கிடைக்கும் சூழலை திமுக அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைக் கல்வியில் சிறந்த மாநிலம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தென்னிந்தியாவிலேயே கல்வி கற்பதில் தமிழ்நாடு தற்போது அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
மேலும் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கப்போவதாகத் தகவல் வருகிறதே?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “என்னைப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தெரிகிறதா?” என்று சிரித்தபடியே கேள்வி எழுப்பி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
