தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) பயிற்சியாளர் அங்குஷ் பரத்வாஜ், 17 வயது தேசிய வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 16-ம் தேதி, ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வீராங்கனையின் ஆட்டத்திறனை ஆய்வு செய்வதாகக் கூறி, பயிற்சியாளர் அங்குஷ் அவரைத் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து அத்துமீறியதுடன், இது குறித்து வெளியில் சொன்னால் வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கையை அழித்துவிடுவதாக மிரட்டியும் உள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனை அளித்த புகாரின் பேரில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில், தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் அங்குஷ் பரத்வாஜை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர் எந்தப் பணியிலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதே பயிற்சியாளர் மீது ஏற்கனவே மற்றொரு வீராங்கனையும் இதே போன்ற புகாரை எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
