திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரங்கே கவுண்டம்பாளையத்தில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரி. கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ஜீவாவின் தந்தை ராஜேந்திரனை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே வருவாய் துறை அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜீவா நல்லூரில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அப்போது வருவாய் ஆய்வாளரான மைதிலி வாரிசு சான்றிதழ் பெற 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அந்த அளவுக்கு தன்னால் பணம் தர இயலாது என ஜீவா கூறியதும் 2000 ரூபாயாவது தருமாறு மைதிலி கேட்டார். இதுகுறித்து ஜீவா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 2000 ரூபாய் நோட்டுகளை ஜீவா மைதிலியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மைதிலியை கையும் களமாக கைது செய்தனர். மேலும் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய் பீம் மைதிலியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.