கடந்த 2025-ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தபோது, ஒட்டுமொத்த நாடும் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தது. ஆனால், 2026-ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம், அந்த ‘சாதனை’ குடும்பத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது. மே 3-ம் தேதி நடந்த தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடியின் பின்னணியில் அதே குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் பிவால், மாங்கி லால் மற்றும் விகாஸ் ஆகியோர் மூளையாகச் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அசல் வினாத்தாள்களைப் பயிற்சி மையங்களுக்கு விற்றது மட்டுமல்லாமல், தங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் அதே பாணியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 5 மாணவர்களின் பழைய மதிப்பெண்கள் மிகக் குறைவாக இருந்த நிலையில், 2025 நீட் தேர்வில் மட்டும் எப்படி அதிக மதிப்பெண் பெற்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திறமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்பட்ட ஒரு விஷயம், இன்று இந்தியாவின் மிகப்பெரிய கல்வி மோசடியாக உருவெடுத்துள்ளது ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
