அழகு என்பது மற்றவர்கள் வகுக்கும் வரையறைகளைச் சார்ந்தது அல்ல, அது ஒருவரது தன்னம்பிக்கையிலேயே அடங்கியுள்ளது என்பதை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். காலத்திற்கேற்ப அழகைப் பற்றிய பார்வைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அழகியல் கருத்துகள் இன்றைக்குப் பொருந்தாது என்றார்.

மேலும் சமூகம் அல்லது பிறர் என்ன சொன்னாலும், நமக்கான முடிவுகளை நாமே எடுக்க வேண்டும் என்றும், அழகின் பெயரால் திணிக்கப்படும் எந்தவொரு குறுகிய வரையறையையும் கண்மூடித்தனமாக ஏற்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் இன்றைய சூழலில் சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களின் (Influencers) விளம்பரங்கள் குறித்துப் பேசிய அவர், பார்வையாளர்கள் தற்போது மிகவும் முதிர்ச்சியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். பணம் பெற்றுக்கொண்டு செய்யப்படும் விளம்பரங்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வதாகவும், ஒரு பொருளின் தரம் மட்டுமே இப்போது விற்பனைக்கு முக்கியக் காரணியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திருப்தி அடைவதற்கும், சமரசம் செய்துகொள்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, சுய நம்பிக்கையுடன் செயல்படுவதே உண்மையான அழகு மற்றும் முன்னேற்றத்திற்கான வழி என்பதைப் பிரியா பவானி சங்கரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.