
சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அதிமுக ஜெயக்குமார் சைக்கிளில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி மாறி பேசுகிறார்கள். மழைக்காலத்தில் போய் யாராவது மழைநீர் வடிகால் பணிகளை செய்வார்களா.? மக்கள் பயந்து போய் வேளச்சேரி பாலத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது திமுக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாததை தெளிவாக காட்டுகிறது.
சும்மா வேலை செய்வது போல் அரசு காட்டிக்கொள்கிறது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியிலும் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக செய்யவில்லை. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட போதிலும் போதிய மழைப்பொழிவு இல்லை. மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் திமுக அரசு தப்பிவிட்டது. இல்லையனில் சாயம் வெளுத்திருக்கும். மேலும் திமுக அரசு ஆளுநரும் தற்போது ஒன்றாகிவிட்டனர் என்று கூறினார்.