
தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போதே திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என நான் கூறியிருந்தேன்.
அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் செல்வாக்கோடு இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நான் சொன்னது போலவே தற்போது நடந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரின் போதுக்கூட பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான் என கூறினேன்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் உரிய விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருந்தாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது விளையாட்டு துறை அமைச்சர் யார் என்று கேட்டால் உங்கள் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு விளையாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி அமித்சாவை எதற்காக சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் அவரோ நான் சொல்லித்தான் 100 நாள் வேலை திட்டம் மற்றும் மெட்ரோ போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது என்கிறார். இதுபோன்ற மோசமான பொய் மற்றும் பித்தலாட்ட வேலை தான் எடப்பாடி பழனிச்சாமியோடதாக இருக்கிறது. மேலும் இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும் என்று கூறினார்.