தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு சமூக வலைத்தளப் பதிவு மூலம் மிகக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்குக் கொடூரமான பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ள அவர், சூலூர் சிறுமியின் தாய்க்குக் கூடச் சொல்லாமல் அவசர அவசரமாக உடல் எரிக்கப்பட்டிருப்பதாக அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டது, கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மற்றும் முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் 13 வாகனங்களை அடித்து நொறுக்கியது போன்ற கொடூரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இது தமிழ்நாடா, இல்லை உத்தரபிரதேசமா?” என்று உதயநிதி ஸ்டாலின் எழுப்பியுள்ள இந்த ஆவேசக் கேள்வி தமிழக அரசியல் களத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது!