பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும் அதிதீவிர வெறுப்பு அரசியலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். புல்டோசர் கதையை பேசுகிறார்.

அன்பால் போதித்த மகாத்மா காந்தியடிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என விரும்பிய நேரு ஆகியோர் இருந்த இந்த நாட்டில் பிரதமராக இருந்து கொண்டே மோடி அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதும், நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டமாகட்டும் இந்திய மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 151 ஆகட்டும், மத அரசியல், சாதிய அரசியல், மொழி அரசியல் இந்த மூன்று அரசியலும் செய்யக்கூடாது என தெளிவாக சொல்கின்றன. ஆர்டிகள் 151 ஐ படித்தாலே ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் எப்படி பேச வேண்டும் என தெளிவாக தெரிந்துகொள்ளலாம். ஆனால் மோடி அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மதிக்கவில்லை. அதற்கு மாறாக தோல்வியடைய போகிறோம் என்பதை உணர்ந்து இப்போது கலவர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.