சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரம், ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக இருக்கக்கூடும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருடப்பட்ட அந்த ஹார்ட் டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல், முந்தைய ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான மிக முக்கிய தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாட்கள் நுழைய வாய்ப்பே இல்லை என்பதால், மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்க முடியாது என்றும் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசு அலுவலகங்களில் ஒன்றான மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) வேலை செய்யவில்லை என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். தரகர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் கூறியுள்ள அவர், உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருக்க வாய்ப்புள்ளதாகவும், 5 ஆண்டுகால சிசிடிவி அலட்சியம் மற்றும் இந்தத் திருட்டின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து தமிழக அரசு உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே ஏற்கனவே விவாதமாக மாறியுள்ள நிலையில், அன்புமணியின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
