டெல்லிக்கு அருகிலுள்ள காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில், சனிக்கிழமை இரவு ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌர் சிட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இரவு நேரத்தில் சிஜார்சி (NH-9) பகுதியிலிருந்து ராஜு என்ற இளைஞரின் ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார்.
ஈ-ரிக்ஷா வழக்கமான பாதையில் செல்லாமல், திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான குறுக்குப்பாதையில் திரும்பியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வழி மாறுவது குறித்துக் கேட்டுள்ளார்.
ஆனால், ஓட்டுநர் பதிலேதும் கூறாமல் தொடர்ந்து அந்தச் வெறிச்சோடிய பாதையிலேயே ரிக்ஷாவை ஓட்டியுள்ளார். இதனால் தான் கடத்தப்படுகிறோமோ என்று பயந்துபோன அந்த இளம்பெண், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..” என்று கூச்சலிட்டுள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்த மக்கள், ஈ-ரிக்ஷாவை வழிமறித்து ஓட்டுநரை கீழே இழுத்துப் போட்டுத் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த இந்திராபுரம் போலீசார், ஓட்டுநரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், இளம்பெண் தரப்பில் புகார் அளிக்க முன்வராததால், அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக (பிரிவு 151) ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஓட்டுநர் எதற்காக வழிமாறிச் சென்றார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
