அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த செங்கோட்டையன், விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை என்றும் தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தியூர் தொகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று காலை செங்கோட்டையன் வீட்டின் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பேரூர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, என் வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வந்து செல்வதும் என்னை சந்தித்து பேசுவதும் வழக்கம்தான். அந்தியூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அழைப்புகளை வழங்குவதற்காக நிர்வாகிகள் என்னுடைய வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி நான் எந்த ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.