ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ஹரிபூர் கிராமத்தில், நிலத் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் மெத்தனத்தைக் கண்டித்து அவரது சடலத்தைச் சைக்கிளில் சுமந்து சென்று காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிபூர் கிராமத்தைச் சேர்ந்த பாரத் ஜேனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கமலா சேத்தி என்பவரது குடும்பத்திற்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக நிலத் தகராறு நீடித்து வந்துள்ளது. இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த மே 10-ஆம் தேதி இந்தத் தகராறு முற்றிய நிலையில், பாரத் ஜேனா, அவரது மகன் மானஸ் மற்றும் மனைவி பாரதி ஆகியோர் இணைந்து கமலா சேத்தியைத் சுத்தியல் மற்றும் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் கமலா சேத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையின் அலட்சியமே இந்தக் கொலைக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டிய உறவினர்கள், ஆம்புலன்ஸைப் பயன்படுத்த மறுத்து, கமலாவின் சடலத்தைச் சைக்கிளில் வைத்துத் தள்ளிக் கொண்டு கைரேகை காவல் நிலையத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். “ஐந்து ஆண்டுகளாக நாங்கள் முறையிட்டும் போலீஸ் அமைதி காத்ததன் விளைவு தான் இந்த மரணம்” எனப் போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
VIDEO | Balasore, Odisha: A family carried a woman’s body on a bicycle for 15 kilometres to police station to protest against police inaction in a murder case linked to a land dispute. pic.twitter.com/kbLFd8aHje
— Press Trust of India (@PTI_News) May 12, 2026
பெண் உயிரிழந்து மூன்று நாட்களாகியும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் சடலம் அழுகத் தொடங்கிய நிலையிலும், தங்களுக்கு நீதி வேண்டும் எனக் காவல் நிலையம் முன்பே அவர்கள் அமர்ந்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக பாரதி ஜேனாவை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். முக்கியக் குற்றவாளிகளான பாரத் ஜேனா மற்றும் மானஸ் ஜேனா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
நீண்டகாலப் பிரச்சனையை நிர்வாகம் கண்டுகொள்ளாததால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
