தமிழகத்தில் 2026 தேர்தலில் 1 கோடியே 68 லட்சம் ஓட்டுகளைப் பெற்று டிவி கே (TVK) அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மக்களின் அந்தத் தீர்ப்புக்கு நாம் முழுமையாக மதிப்பு கொடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை பேசியுள்ளார். மேலும், தற்போதைய டிவி கே அரசில் உள்ள அமைச்சர்களில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் முதல்முறை அமைச்சர்கள் என்பதால், ஆரம்பத்தில் சில தட்டுத்தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும், ஒரு நல்ல சமுதாயமாக நாம் அவர்களைத் தூக்கிப்பிடிக்க வேண்டுமே தவிர, கீழ்த்தரமாக அழுத்தக் கூடாது என்பதில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு தெளிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பு அதிகாரத்தை மூர்க்கத்தனமாகப் பிடிப்பதற்கோ அல்லது ஆணவ அரசியலுக்கோ வரவில்லை என்று தெளிவுபடுத்திய அண்ணாமலை, தமிழக அரசிடம் உள்ள ஒரு முக்கியக் குறைபாட்டையும் சுட்டிக்காட்டினார். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று முதலமைச்சர் உத்தரவிட்டும், தங்களது கள ஆய்வில் இன்னும் நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்படாமல் திறந்திருப்பது தெரியவந்துள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, அரசுக்குத் தொடர்ந்து முறையான அழுத்தம் கொடுத்து, விதிமீறித் திறந்திருக்கும் அந்த டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வைப்போம் எனப் பொள்ளாச்சி மாநாட்டு மேடையில் அண்ணாமலை அதிரடியாகக் கூறியுள்ளார்.
