தந்தை விஜயகாந்த் உடலைக் கண்டு மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் கதறி அழுதனர்.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 06:10 மணிக்கு காலமானார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுள்ளது. மேலும் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 04:45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை உடலைக் கண்டு மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் கதறி அழுதனர். விஜயகாந்த் உடல் முன்னிலையில் மகனை கட்டி அணைத்தபடி பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் டி. ராஜேந்திரன், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து, மன்சூர் அலிகான்  உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் திருநாவுக்கரசர், முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், அமைச்சர் உதயநிதி, துரை வைகோ  உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே கோயம்பேட்டில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் போலீசார் திணறி வருகின்றனர்..