கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையில், நடிகர் விஷால் அண்ணன் என்ன மன்னிச்சிடுங்க என அழுதபடியே வீடியோ வெளியிட்டுள்ளார்..

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுள்ளது.  இதனிடையே இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் அண்ணன் இறந்துட்டாருங்குற விஷயம் இப்பதான் கேள்விப்பட்டேன். அண்ணன் என்ன மன்னிச்சிடுங்க. முதல்ல என்ன மன்னிச்சிடுங்க அண்ணா.. இந்த நேரத்துல சத்தியமா உங்க பக்கத்துல இருந்து உங்க முகத்தை ஒரு முறை பார்த்து காலை தொட்டு கும்பிட்டு உங்க கூட இருந்திருக்கணும்.. நான் வெளிநாட்டில் இருந்தது என் தப்புதான். என்ன மன்னிச்சிடுங்க. ஏன்னா நான் வந்து நல்லது செய்றது சாதாரண விஷயம் இல்லை. எங்கள மாதிரி ஆள் நல்லது செய்றது சாதாரண விஷயம் அல்ல. எங்கேயோ ஒரு யார்கிட்டயோ இருந்து கத்துக்கிட்டு இருந்திருக்கணும்.

அதை உங்ககிட்ட நான் கத்துக்கிட்டேனே. சத்தியமா சொல்றேன்.. உங்க அலுவலகத்தில் வந்து கிட்டத்தட்ட 20 வருஷம் முன்னாடி நான் கேள்விப்பட்டு இருக்கேன். நான் நிறைய முறை நிறைய பேர் சொன்னது நான் கேட்டு இருக்கேன். உங்க அலுவலகத்துக்கு யாராவது பசியோட வந்தா நீங்க சோறு போட்டு அனுப்வுவீங்கன்னு. அதையே தான் நான் நானும் செய்யணும்னு எறங்குனேன். அதே மாதிரி நீங்க எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க இந்த சமுதாயத்துக்கு. இன்னைக்கு வந்து ஒரு அரசியல்வாதியோ, ஒரு நடிகர் சங்க முன்னாள் தலைவரோ இறந்ததை விட ஒரு நல்ல மனிதரை இழந்தது தான் என்னால ஜீரணிக்க முடியல அண்ணா..

இன்னைக்கு நடிகர் சங்கத்தில் வந்து நாங்க எல்லாம் பொறுப்பேற்றதுக்கு அப்புறம் உங்களை வந்து சந்திக்கும்போது பிரேமலதா அம்மா சொன்ன ஒரே விஷயம் நீங்க பத்திரத்தை மீட்டுட்டு எடுத்துட்டு வரும்போது, நீங்க ஒரு விஷயமாகவே எடுத்துக்கல. அந்த பத்திரத்தை பொக்கிஷமா நீங்க வந்து உங்க லாக்கர்ல வச்சீங்கன்னு அந்த அம்மா சொல்லும்போது நீங்க செஞ்ச உதவிகள்.. நீங்க செஞ்ச விஷயங்கள்.. நடிகர் சங்கத்துக்கு செஞ்சது, நீங்க நடத்துன அந்த நிர்வாகம். அரசியல்வாதியாக நீங்க அவ்ளோ துணிவா நீங்க பேசுன பேச்சு, செயல்பாடு..

ஒரு நடிகனா, நீங்க இவ்வளவு பேர் வாங்கி இருக்கீங்க.. ஆனா ஒரு மனிதனா பேர் வாங்குவது சாதாரண விஷயம் இல்ல.. சில நபர்கள் தான் மனிதனா நீண்ட நாள் அந்த பேர் நீடிக்கும். அந்த வகையில் நீங்க இருக்கீங்க.. என்ன மன்னிச்சிடுங்க. உண்மையிலே நான் சத்தியமா சொல்றேன்.. இன்னைக்கு நான் உங்க பக்கத்துல இருந்திருக்கணும்.. உங்க பக்கத்தில் இருந்து இருக்கணும். உங்க ஆத்மா சாந்தி அடையனும் அண்ணன்.. நீங்க நல்லா இருக்கணும்.. சத்தியமா உங்க பேர்ல நான் வந்து கண்டிப்பா உங்க பேர்ல நான் மேற்கொண்டு நல்லது பண்ணனும்னு தோணுது.. அவ்ளோதான் வேற ஒன்னும் சொல்ல முடியல.. உங்களுக்கு நா பண்ண வேண்டிய ஒரு விஷயம் இதுதான்னு நினைக்குறேன்” என அழுதபடியே பேசினார்..