தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அதன்பின் ‌ டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மனைவி மோனிஷா. இந்நிலையில் மோனிஷாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் ஆதரவாளரான மொட்டை கிருஷ்ணனுக்கு அவர் ஆதரவு கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து ‌ரூ.75 லட்சம் பணம் ட்ரான்ஸ்பர் ஆனது தெரிய வந்தது.

இந்த பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதா என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்தது. இது தொடர்பாக தற்போது மோனிஷா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், வங்கி கணக்கில் இருந்து பணம் வெளியானதாக வந்த தகவல்கள் போலியானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.