ஹரியானா மாநிலம் குருகிராம் காண்ட்ஸா பகுதியைச் சேர்ந்த 26 வயதான மான்சி என்ற இளம் தாய்க்கு, அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மாமனார், மாமியார் உள்ளிட்டோர், “ஆண் வாரிசைப் பெற்றுத் தரவில்லை” என்று கூறி அவரைப் பயங்கரமாகக் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டும் துரத்தியுள்ளனர். இதனால் கணவனுடன் மட்டும் தனியாக வாடகை அறைக்கு வந்து தங்கியுள்ளார்.
ஆனால், அங்கும் அவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து மான்சியை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும், திருமண மணம் முடிந்து 7 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இவரை வீட்டை விட்டு முழுமையாகத் துரத்திவிட்டு, கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் அவரது குடும்பத்தினர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனால் பொறுமை இழந்த மான்சி, நள்ளிரவில் தனது இரண்டு பிஞ்சு மகள்களையும் தூக்கிக்கொண்டு அழுதுகொண்டே காவல் நிலையத்திற்கு ஓடிவந்து தஞ்சம் புகுந்துள்ளார்.
“எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என் குழந்தைகளைக் கொன்றுவிட்டு நானும் செத்துவிடுவேன்” என அவர் கதறியது போலீசாரையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள குருகிராம் போலீசார், அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் புகுந்த வீட்டினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
