
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். தனது X (முன்னைய ட்விட்டர்) பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள உரை சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
“ஒற்றுமையில் அச்சமில்லை. வலிமையில் எல்லையில்லை. இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். இந்த உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. நாம் ஒரே அணி! ஜெய் ஹிந்த்,” எனத் தெரிவித்துள்ள டெண்டுல்கர், இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலையும், அவர்களின் துல்லிய நடவடிக்கையையும் பாராட்டியுள்ளார்.
ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பயணிகள் உயிரிழந்ததைக் தொடர்ந்து, மே 7-ம் தேதி இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் முகாம்களை குறிவைத்ததாகவும், இந்திய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து இந்த நடவடிக்கையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியதாகவும் குறிப்பிடப்படுகிறது.