கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாளப் பிரஜை உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தபோதும், பெண்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குறிப்பாக திருமணமான பெண்களின் கணவர்களை குறிவைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ‘சிந்தூர்’ என்ற சொல்லின் பின்னணி மிகவும் முக்கியமானது. சிந்தூர் என்பது இந்திய கலாச்சாரத்தில் திருமணமான பெண்களின் அடையாளமாகக் கருதப்படும் குங்குமம் ஆகும். அந்த சின்னத்தையே அழிக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்ததால், அதே பெயரால் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாகக் குறிவைத்து தாக்கியது. பொதுமக்கள் அல்லது பாகிஸ்தான் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் திட்டமிட்ட இடங்களையே இந்தியா வெற்றிகரமாக அழித்தது. இது போருக்கான செயல் அல்ல, நீதிக்கான ஒரு துல்லியமான பதிலடி.

இந்த நடவடிக்கை, இராணுவ நடவடிக்கையைவிட, இந்திய குடும்ப மற்றும் கலாச்சார அடையாளங்களை காப்பாற்றும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. சிந்தூர் என்ற பெயரில் நடைபெறும் இந்த பதிலடி, இந்தியா தனது அடையாளங்களை காக்கத் தயார் என்றும், இனி ஒவ்வொரு தாக்குதலுக்கும் அதற்கேற்ப பதிலளிக்க தயார் என்றும் உலகத்திற்கு ஒரு வலிமையான செய்தியை வழங்குகிறது.

அதாவது ஆண்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதால் அவர்களின் மனைவிகளான பெண்கள் குங்குமம் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரை இந்திய ராணுவம் தேர்வு செய்துள்ளது.