ரக்ஷாபந்தன் விழாவையொட்டி தனது சகோதரருடன் விழாவைக் கொண்டாடுவதற்காக 24 வயதான பளக் என்பவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். மூன்று மாத கர்ப்பிணியான அவர், குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் அனைவரும் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக உணவகத்துக்கு வெளியே சாலையோரம் நின்றிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதியது. இதில் பளக் உள்பட 11 பேர் காயமடைந்தனர். எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த பளக் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். மற்ற காயமடைந்தவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்துக்குக் காரணமான காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரக்ஷாபந்தன் விழாவைக் கொண்டாட தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணிப் பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
