நமது அன்றாட வாழ்க்கையை இணைய வழி வர்த்தகம் எவ்வளவு எளிமையாக்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிடித்தமான பொருளை ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்வதோடு, பிடிக்கவில்லை என்றால் அதே எளிமையுடன் அதைத் திருப்பி அனுப்பும் வசதியும் இன்று நம்மிடம் உள்ளது. ஆனால், இந்த ஒரு சில நிமிடச் செயல்முறைக்குப் பின்னால் ஒரு டெலிவரி பணியாளர் படும் கடின உழைப்பையும், வியர்வையையும் நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இந்த உண்மையை நமக்கு ஆழமாக உணர்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்மணி, சமீபத்தில் ஆன்லைனில் ஒரு நகை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் வழக்கம்போல அதனைத் திருப்பி அனுப்பும் படி கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, குறிப்பிட்ட நாளில் நிறுவனத்தின் சார்பில் ஒரு டெலிவரி மற்றும் பிக்கப் ஏஜென்ட் அவரது வீட்டிற்குப் பொருள் பெற வந்துள்ளார்.
View this post on Instagram
வழக்கமான நடைமுறைகளைப் போல அந்த நபர் பார்சலைப் பெற்றுக்கொண்டு அதனைச் சரிபார்க்கத் தொடங்கியுள்ளார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கையோ அல்லது மேசையோ இல்லாததால், அவர் தயங்காமல் வீட்டின் வெளியே சாலை ஓரத்தில், வெயிலில் தரையிலேயே அமர்ந்து தனது வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளார்.
ஏசி அறையில் அமர்ந்து கொண்டு நாம் எளிதாக ஆர்டர்களைப் போடுவதற்கும், இந்த மனிதர்கள் வெயில், தூசு, போக்குவரத்து நெரிசல் மற்றும் உடல் சோர்வை பொருட்படுத்தாமல் நமக்காக ஓடுவதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை ஷீத்தல் அந்த நொடியில் உணர்ந்துள்ளார். இந்த தருணத்தைத் தனது தொலைபேசியில் பதிவு செய்த அவர், பின்னர் அதனைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, “அந்த டெலிவரி ஏஜென்ட் யார் என்றோ, அவரது சொந்த வாழ்க்கை எத்தகையது என்றோ எனக்குத் தெரியாது. அவரது கஷ்டங்கள் என்னவென்றும் எனக்குத் தெரியாது. ஆனாலும், வெயிலில் தரையில் அமர்ந்து கொண்டு அவர் தனது வேலையை எவ்வித புகாருமின்றி நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்வதைப் பார்த்தபோது எனது மனம் நெகிழ்ந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாம் பெரும்பாலும் டெலிவரி செய்பவர்களை வெறும் ஒரு சேவையாக மட்டுமே பார்க்கிறோம்; பார்சல் வந்தது, ஓடிபி கொடுத்தோம், வேலை முடிந்தது என்று கடந்து சென்று விடுகிறோம். ஆனால், காலை முதல் மாலை வரை பல வீடுகளுக்குச் சென்று, படியில் ஏறி இறங்கி, பசியையும் தாகத்தையும் பொருட்படுத்தாமல் நம் ஆர்டர்களைச் சேர்ப்பிக்க அவர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதை நாம் சிந்திப்பதில்லை.
ஷீத்தலின் இந்த வைரல் வீடியோ நமக்கு ஒரு எளிய பாடத்தைக் கற்பிக்கிறது. அடுத்த முறை நமது வீட்டிற்குப் பொருள் கொடுக்கவோ அல்லது பெறவோ யாராவது வந்தால், அவர்களுக்கு ஒரு மனிதாபிமான மரியாதையைக் கொடுங்கள்; ஒரு குவளை தண்ணீர் அல்லது ஒரு சிறிய புன்னகையை வழங்குங்கள். அந்தச் சிறிய இடைவேளை கூட அவர்களின் நீண்ட நாள் சோர்வைப் போக்கப் பெரிதும் உதவும்!
