கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உள்ள பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் எஸ்ஐ ஒருவர் பிரியாணி வாங்கி ஆசை ஆசையாக சாப்பிட காத்திருந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் எஸ்ஐ அஜித்குமார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.