நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானவர நல்லூர் பகுதியில் விவசாயியான சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி கண்ணன் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வீரவநல்லூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பந்த நிலையில் ஆசிரியர்கள் திட்டியதால் கடந்த 7-ம் தேதி விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். ஆனால் நேற்று முன்தினம் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயரிழந்த நிலையில் கோபம் அடைந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்குள் நுழைந்தும் பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.

இது தொடர்பாக மாணவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வைக்க மாட்டோம் என என்னுடைய மகனை ஆசிரியர் சுபா மிரட்டியுள்ளார். எனவே அவர் மீதும் என் மகனின் மரணத்திற்கு காரணமான பள்ளியின் முதல்வர் சீதாலட்சுமி, தாளாளர் மங்கையர்கரசி, நிர்வாக இயக்குனர் சாம் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன் புகாரில் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவனின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பள்ளி வளாகத்திற்குள் இரண்டு மர்ம நபர்கள் நுழைந்து பேருந்துக்கு தீ வைத்தது தெரியவந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவர்கள் அவ்வாறு செய்தது தெரியவந்தது. அதன்படி 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை தேடி வருகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.