
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவர் கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் வந்த போலீசார் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அனு பிரியா மற்றும் சில மாணவர்கள் கல்லூரி மருத்துவமனை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 1500 ரூபாய் காணாமல் போனதாக கூறப்பட்டதால், இது தொடர்பாக பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் மன உளைச்சல் அடைந்த அனுப்ரியா தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விசாரணை என்ற பெயரில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
எனவே இது குறித்து போலீசார் கல்லூரி முதல்வரிடமும், ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி முதல்வர் கூறியதாவது நாங்கள் எதார்த்தமான விசாரணை தான் மேற்கொண்டோம் அதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நாங்கள் காரணம் இல்லை என கூறினார்.
இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.