ஆசியக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இங்குதான் நடைபெறும் என கூறப்படும் நிலையில், விரைவில் அட்டவணை வெளியாகலாம்..

இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியை அனைவரும் ஆவலுடன் பார்க்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களைத் தவிர, இந்த அணிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஐசிசி போட்டியில் இவ்விரு அணிகளுக்கிடையே போட்டி என்றால், அன்றைய தினம் அனைவரும் தொலைக்காட்சிகள் முன் அமர்ந்து விடுவார்கள். ஆனால் 2023 ஆசிய கோப்பை போட்டி உண்மையில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த ஆசிய கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டு முதல் மூன்று போட்டிகள் நிச்சயம் இருக்கும். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு சம்மதிக்கவில்லை. பாகிஸ்தான் தங்கள் நாட்டுக்கு வருமாறு கோருகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் பேச்சுவார்த்தைநடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின்படி, ஆசிய கோப்பை 2023 போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும். இலங்கையில் 9 போட்டிகளும், பாகிஸ்தானில் 4 போட்டிகளும் நடைபெறும், அதாவது, ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும்.

பாகிஸ்தான் – இந்தியா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடந்தாலும், அந்த போட்டி இலங்கையில் நடைபெறும். சமீபத்தில் இந்த ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும் இடமும் இறுதி செய்யப்பட்டது.

2023 ஆசியக் கோப்பை போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கையின் தம்புல்லாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும். ஆசிய கோப்பை போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.