துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை T20 இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் ஆசியக் கோப்பையை கைப்பற்றி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்தது.

இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோஷின் நக்வியின் கையில் இருந்து கோப்பையை வாங்க இந்திய வீரர்கள் மறுத்தனர்.

இதையடுத்து, சத்கார மேடையில் ஆசியக் கோப்பை நிர்வாகத்தினர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றனர். இந்திய வீரர்கள், 2024 T20 உலகக் கோப்பையை கேப்டன் ரோகித் ஷர்மா உயர்த்தியதை நினைவுபடுத்தும் வகையில், சைகை மூலமாக வெற்றியை கொண்டாடினர். இந்த வெற்றியில் பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த BCCI தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, “பாகிஸ்தானின் முக்கிய தலைவரிடமிருந்து கோப்பை வாங்குவதை இந்தியா தவிர்க்க முடிவு செய்துள்ளது. விரைவில் கோப்பை அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு அனுப்பப்படும்,” எனத் தெரிவித்தார்.