அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (நவ. 5) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நான் 53 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன்; தனிப்பட்ட முறையில் என்னை யாரும் இயக்க முடியாது” என்று ஆவேசமாகக் கூறினார்.

மேலும், “அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் (இ.பி.எஸ்.) குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது; அவரது மகன், மைத்துனர், மருமகன் ஆகியோர் தலையிடுகிறார்கள்; இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அத்துடன், தான் “அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன். ஆனால், யார் யாரிடம் பேசுகிறேன் என்பதைத் தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து” என்று மர்மமாகக் கூறிய செங்கோட்டையன், தனது அடுத்தகட்ட நகர்வுகளால் நல்லதே நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.