முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை அறிவற்றவர் என்று கடுமையாக விமர்சித்த சில நாட்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளால் அதிருப்தியடைந்த அக்தர், நக்விக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது என்று முன்பு சாடியிருந்தார்.
ஆனால், தற்போது அவர் மிகவும் சக்திவாய்ந்த மனிதர் என்றும், அவர் தவறான நபர்களால் வழிநடத்தப்படுவதாகவும் அக்தர் தனது தொனியை மாற்றியுள்ளார். நக்வி ஒரு திறமையான நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டுள்ள அக்தர், அவரைச் சுற்றியுள்ள ஆலோசகர்கள் தான் கிரிக்கெட் வாரியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சீரமைக்க நக்விக்கு அதிகாரம் இருந்தாலும், தகுதியற்றவர்களின் ஆலோசனைகளால் அவர் எடுக்கும் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்துவதாக அக்தர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் மனமாற்றம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
