பஞ்சாப் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸில் உள்ள அரசு கிடங்கு நிறுவன மேலாளரான ககன்தீப் சிங் ரந்தாவா என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக ககன்தீப் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் லால்ஜித் சிங்கின் உதவியாளருக்குச் சாதகமாக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு டெண்டரை வழங்கும்படி தான் வற்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அவர் சட்டப்படி வேறு ஒருவருக்கு அந்த டெண்டரை வழங்கியதால், அமைச்சரின் இடத்திற்கு அழைக்கப்பட்டு தான் தாக்கப்பட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுவே அவர் தற்கொலைக்குத் தூண்டுகோலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் மறுத்துள்ளார். இருப்பினும், விசாரணை முடியும் வரை பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
முதலமைச்சர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ராஜினாமா நடந்ததாகக் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து பஞ்சாப் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
