இந்திய கிரிக்கெட் உலகில் நீண்ட காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் காரணமாகச் செய்திகளில் இடம்பிடித்து வந்த முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான உறவில், தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழாவில் மேடையில் பேசிய முன்னாள் இந்திய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கை தமிழ்நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்று வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.

சிறுவயதில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதைப் பார்த்து வருவதாகவும், அவரைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்க ஆளுமையையும், அபாரமான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனையும் தான் இதுவரை கண்டதில்லை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், தினேஷ் கார்த்திக் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்து பேட் செய்வதை பலமுறை பார்த்ததாகவும், அவரது கிரிக்கெட் அறிவு அனுபவமும் தனக்குத் தனிப்பட்ட முறையில் அளவற்ற உதவிகளைச் செய்ததால் அவருக்குத் தான் என்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும் முரளி விஜய் மேடையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இடையேகடந்த காலங்களில் ஏற்பட்ட குடும்ப விவாகரத்து மற்றும் தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக பெரும் விரிசல் ஏற்பட்டது, அதுகுறித்து இருவரும் பொதுவெளியில் இதுவரை மௌனம் காத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

“>

தற்பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கை வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியிருப்பது, அவர்கள் கடந்த கால கசப்பான கருத்துக்களைக் கடந்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.