மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி 7-வது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி மகுடம் சூடியுள்ளது. இந்திய அணி இந்தத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியால் இங்கிலாந்து வீராங்கனைகள் பெரும் ஏமாற்றமடைந்து மைதானத்திலேயே கண்கலங்கினர்.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர் ப்ரண்ட் கேமராவிற்கு முன்பாகவே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர் முழுவதும் தங்களது அணி சிறப்பாக விளையாடிய போதிலும், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க ஆட்டம் தங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டதாக அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.
View this post on Instagram
இங்கிலாந்தின் பந்துவீச்சு குறித்துப் பேசிய கேப்டன் ஸ்கிவர் ப்ரண்ட், பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கிய போதிலும், விக்கெட்டுகளை எடுக்க மிகவும் தாமதமாகிவிட்டதாக ஒப்புக்கொண்டார். குறிப்பாக, ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி ஆடிய அதிரடி ஆட்டம்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கிய திருப்புமுனை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருவேளை டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம் என்றும், பேட்டிங் செய்யும்போது பந்து பேட்டின் நடுப்பகுதியில் சரியாகப் படாமல் வீராங்கனைகள் திணறியதாகவும் கூறினார்.
இறுதிப்போட்டி போன்ற கடுமையான அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில், ஒரு பெரிய அணி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சே சிறந்த உதாரணம் என்று பாராட்டிய அவர், இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இங்கிலாந்து அணி அடுத்த முறை இன்னும் பலமாக மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
