உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே அமைந்துள்ள பண்டேபூர் பகுதியில் ‘செரீன் சோனி ப்ளே ஸ்கூல்’ என்ற தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள ஒரு வழக்கறிஞரின் 5 வயது மகன் இப்பள்ளியில் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருந்தபோது, சிறுவனுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் அவசரம் ஏற்பட்டுள்ளது. உடனே அவன் அங்கிருந்த ஆசிரியை பிரித்தியிடம் சென்று கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளான். ஆனால், அந்த ஆசிரியை இரக்கமின்றிச் சிறுவனைக் கழிவறைக்குச் செல்லக் கடுமையான முறையில் மறுத்துள்ளார்.

சிறு குழந்தையான அச்சிறுவனால் தனது இயற்கை உபாதையைக் கட்டுப்படுத்த முடியாமல், தான் அணிந்திருந்த கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டான். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஆசிரியை பிரித்தி, கோபத்தில் அந்தப் பிஞ்சுச் சிறுவனை ஒரு தனியறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு கேஸ் அடுப்பில் கத்தியைப் பழுக்கக் காய்ச்சி, சிறுவனின் அந்தரங்க உறுப்பில் கொடூரமாகச் சூடு வைத்துள்ளார். வலியால் அந்தச் சிறுவன் கதறித் துடித்தபோதும், ஆசிரியையின் மனது இரங்கவில்லை என்பது மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், தனது பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்படுவதாகக் கூறி கதறி அழுதுள்ளான். இதைக் கண்டு பதறியடித்த அவனது தாய், குழந்தையின் ஆடைகளைக் கழற்றிச் சோதித்துப் பார்த்தபோது, அந்தரங்க உறுப்பில் பயங்கரக் கொப்புளங்கள் ஏற்பட்டு கருகியிருப்பதைப் பார்த்து நிலைகுலைந்துபோனார். குழந்தையிடம் பாசத்துடன் விசாரித்தபோது, ஆசிரியை பிரித்தி செய்த கொடூரச் செயலை அவன் அழுதுகொண்டே தன் தாயிடம் விவரித்துள்ளான். தன் குழந்தைக்கு நேர்ந்த இந்த நிலையை எண்ணி பெற்றோர் கதறித் துடித்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாகப் பள்ளிக்குச் சென்று முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்டுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகமோ சிறிதும் மனிதநேயமின்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி, பெற்றோரை திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து அதிரடிப் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஆசிரியை பிரித்தி, பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் பள்ளி மேலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மழலையர் பள்ளி மாணவனுக்கு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.