“நமது உணவுக்குழாயால் 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மட்டுமே தாங்க முடியும்; அதற்கு மேல் கொதிக்கும் உணவை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாய் முடியும்” என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்ஷாவைச் சேர்ந்த 42 வயதுடைய வாங் என்ற பெண், பசியின் காரணமாகத் தனது நண்பர்களுடன் ‘ஹாட்பாட்’ எனப்படும் கொதிக்கும் சூப் உணவை ஆறவிடாமல் அவசரமாக விழுங்கியுள்ளார். உணவு தொண்டைக்குள் சென்ற அடுத்த கணமே அவருக்கு மார்பில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. வலியைத் தணிக்க அவர் உடனடியாகக் குளிர்ந்த நீரைக் குடித்துள்ளார். ஆனால், அடுத்த நாள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விழுங்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அவர் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட எண்டோஸ்கோபி (Endoscopy) பரிசோதனையில், அவரது தொண்டையிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் உணவுக்குழாயில் சுமார் 8 சென்டிமீட்டர் நீளத்திற்குப் பயங்கரமான புண் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

மனிதனின் உணவுக்குழாய் பொதுவாக 25 முதல் 30 சென்டிமீட்டர் நீளம் கொண்டது என்ற நிலையில், வாங் என்ற அந்தப் பெண்ணின் தொண்டைப் பகுதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொதிக்கும் உணவால் அப்படியே வெந்துபோயுள்ளது. ஹாட்பாட் உணவுகள் 80 முதல் 90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்று விளக்கியுள்ள மருத்துவர் வூ சியாவோகிங், சூடான உணவைச் சாப்பிட்ட உடனே குளிர்ந்த நீரைக் குடிப்பதால் தொண்டையின் உள் சவ்வு சுருங்கி, புண் மேலும் ஆழமாக மாறும் என்ற அதிர்ச்சித் தகவலையும் உடைத்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்குச் சரியான நேரத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால், நல்வாய்ப்பாக அது புற்றுநோயாக மாறும் அபாயத்திலிருந்து அவர் தப்பியுள்ளார் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது