அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் முதல் கட்ட நடவடிக்கையாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்களை நாட்டை விட்டு ராணுவ விமானங்கள் மூலமாக வெளியேற்றி வருகிறார். அந்த வகையில் ராணுவ விமானத்தில் 187 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு கை விலங்கு  மற்றும் கால் விலங்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்த மத்திய மந்திரி ஜெய்சங்கர் கை விலங்கு போட்டு அழைத்து வருவது புதிது கிடையாது எனவும் இந்த முறை காலம் காலமாக பின்பற்றப்படுகிறது என்றும் கூறினார். அதே நேரத்தில் இந்தியர்களை மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிற்கு நாங்கள் கோரிக்கை விடுப்போம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது அமைச்ச டிஆர்பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?

அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.

இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ?
இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்…கொஞ்சம் எதிர்ப்பு…அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?