
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார்.
அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள், பெரியம்மாளின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
செயின் பறிக்கப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சத்தமிட, அருகில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய அந்த இரு பெண்களும் தப்பி ஓட முயன்ற நிலையில், அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் இருவரும் துணிவுடன் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.
அவர்கள் உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.