திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 200 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு சென்று மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் உள்ள 16 துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உயர்கல்வியில் முக்கியத்துவம், கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள புதிய வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். அதனை தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என கல்லூரியில் உள்ள தாவரவியல், விலங்கியல், கணிப்பொறியியல், இயற்பியல், வேதியல், நுண்ணுயிரியல் ஆய்வகங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழக திருவாரூர் மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாட்டு நலத்திட்ட அலுவலர் பிரபாகரன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.